LightReader

கல்லூரி பறவைகள்

Nadhi
7
chs / week
The average realized release rate over the past 30 days is 7 chs / week.
--
NOT RATINGS
41
Views
VIEW MORE

Chapter 1 - அத்தியாயம் -1: கல்லூரி கனவு

நன்கு உறங்கிக் கொண்டிருந்த தேவா "காதல் ரோஜாவே" என்று அவன் ஆசையாக வைத்த ரிங்டோன் காதில் விழ , சற்று எரிச்சலுடன் எழுந்து உட்கார்ந்தான். யார் என்று பார்த்தால் பாரதி தான் அழைத்திருந்தாள். மணி என்ன என்று பார்த்தால் சரியாக பன்னிரண்டு ஆகியிருந்தது.

"என்னடீடீ..... இந்த நேரத்துல " என்று அவன் ஏதோ பேச வர அதற்குள் அவள் முந்திக்கொண்டாள். "ஹாப்பியஸ்ட் பர்த்டே டா பொறி உருண்டை..... " என்ற அவளின் உற்சாக குரலில் அவன் கொஞ்ச நஞ்ச தூக்கமும் கலைந்து ஓடியது.

தேங்க்ஸ் டி குட்டிமா ... சரி எனக்கென்ன கிஃப்ட் தரப் போற ?.

உனக்கெல்லாம் நான் கெடச்சதே பெரிய கிஃப்ட் தான். பட் இருந்தாலும் நீ இவ்ளோ ஆசப்பட்டு கேக்குறதால , உன் பர்த்டே கிஃப்டா நாளைக்கு என் மாமியார் கிட்ட வந்து நம்ம லவ் மேட்டர் பத்தி பேசலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?.

அய்யோ ஆள விடுடி எம்மா. நீயும் உன் கிஃப்டும். உன்ன பத்தி தெரிஞ்சும் உன் கிட்ட கேட்டேன் பாத்தியா என்ன சொல்லனும். எங்க அம்மா ஆல்ரெடி, 3 நாளா ஏதோ காண்டுல இருக்காங்க. இதுல நீ உன் கைங்கர்யத்தலாம் வேற நடத்தி வச்சனா மாரியாத்தாவ மல எறக்குறது ரொம்ப சிரமம் மா. அதோட நான் ஓரே அடியா தெருவுக்கு வந்துர வேண்டியது தான்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

சிரிடீ .. நல்லா சிரி. உன் சைட் ரூட் கிளியர் என்ற தைரியத்துல தான என்ன வெறுப்பு ஏத்திட்டு இருக்க. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் எங்க அம்மா கிட்ட சம்மதம் வாங்கிட்டு அப்பறம் இருக்குடி உனக்கு.

மொதல அத செய்டா பொறி உருண்டை. நீயும் நாலு வருஷமா சொல்லிட்டு தான் இருக்க. செயல்ல ஒன்னுத்தையும் காணுமே.

வர வர வாய் அதிகமா ஆயிடுச்சுடி குட்டச்சி உனக்கு.

பின்ன என்னடா. இருபத்து நாலு வயசு ஆகுது. இன்னும் எல்.கே.ஜி படிக்கிற பாப்பா மாதிரி அம்மாவுக்கு பயந்துட்டு இருக்க.

ஏ லூசு மாதிரி பேசாத. எங்க அம்மாஆஆ...

ஐயோ போதும் சாமி. தயவு செஞ்சு உன் அம்மா புராணத்த திரும்ப ஆரம்பிக்காத. இதோட மூன்னூத்துத் தொண்ணூத்தி ரெண்டு தடவை அத நான் கேட்டுட்டேன்.நீ திரும்ப ஆரம்பிக்காத. அப்புறம் என் காதுல ரத்தம் தான் வரும்.

ரொம்ப பண்ணாதடி. என் அம்மா உனக்கு அவ்ளோ ஈசியா போய்ட்டாங்களா?. கல்யாணம் மட்டும் ஆகட்டும். அப்புறம் இருக்குடி உனக்கு.

போடா பொறி உருண்டை....

ஏய்ய்ய் .... எத்தனை தடவை சொல்லியிருக்கன் உனக்கு.என்ன அப்படி கூப்டாதனு...

அப்டி தான்டா கூப்பிடுவேன் . என்ன பண்ணுவ?. பொறி உருண்டை ... பொறி உருண்டை... பொறி உருண்டை ....

இருவரும் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. வெகுநேரம் கழித்து பேசிக் கொண்டே இருவரும் உறங்கிப் போனார்கள். அப்பொழுது மணி மூன்றை தொட்டு இருந்தது.

தேவாவும் பாரதியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சந்தித்தார்கள். பாரதி முதலாம் ஆண்டு அந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது தேவா அதேக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு.....

பாரதியின் அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் ஒரு முன்னணி பிஸ்னஸ் மேன். அவள் வீட்டுக்கு ஒரே பெண். அதனால் செல்லம் கொஞ்சம் அதிகம். அவள் அம்மா சுடர் கொடி கூட சில சமயங்களில் அவள் செய்யும் தவறுகளுக்காக அவளைக் கண்டிப்பார். ஆனால் அவள் அப்பா இதுவரை அவளை ஒரு சிறு சொல் கூட சொல்லியது கிடையாது.அவள் அப்பா இதுவரை அவளுக்காக தேர்ந்தெடுத்தது அனைத்துமே சிறப்பானதாகவே இருந்தது.இப்பொழுதும் அப்படி தான். அவள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்ததில் இருந்தே தன் மகளுக்காக ஒரு சிறப்பான கல்லூரியை தேட துவங்கி விட்டார். அதற்கு தகுந்தாற் போல் பாரதியும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். மார்த்தாண்டனின் சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை. அவர் கால்கள் தரையிலே நிற்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள், அவரிடம் வேலை செய்பவர்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்தார். அவளுக்கு பிடித்தது அனைத்தையும் வாங்கி கொடுத்தார்.

என்ன தான் பாரதி பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும், செல்லமாகவே வளர்ந்திருந்தாலும், அவளுக்கு சூது வாது தெரியாது. இன்னும் விளையாட்டு பெண்ணாகவே இருக்கிறாள். அப்பா அம்மா இல்லாமல் தனியாக இதுவரை வெளியில் சென்றது கிடையாது. நண்பர்கள் வட்டமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு கிடையாது. பள்ளியில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து கொள்வாள்.

அவளுக்கு வாழ்வில் லட்சியங்கள் என்று எதுவும் பெரிதாக கிடையாது. அவள் நன்றாக படித்தது கூட அவள் அப்பா அம்மாவை சந்தோஷப் படுத்த தான். ஆனால் அவளுக்கு படம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கூட, அவள் அப்பா அடுத்து என்ன படிக்க போகிறாய் என்று கேட்டதற்கு உங்கள் விருப்பம் அப்பா என்று சொல்லி விட்டாள். அவளை பொறுத்த வரை தன் அப்பா தனக்காக எதை தேர்வு செய்தாலும் அது சரியாக தான் இருக்கும். அப்படி அவளுக்கு ஒரு அபாரமான நம்பிக்கை தன் தந்தை மீது.

மகள் இப்படி சொல்லியதும் அவருக்கு ஒரே சந்தோஷமாக போய் விட்டது. பிள்ளைகள் எப்படி எப்படியோ தாய் தந்தை பேச்சை மீறிப் போய் சீரழிந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் தன் மகள் இன்னும் ஒரு சிறு பிள்ளை போல தங்கள் கைகளுக்கு உள்ளே இருக்கிறாளே என்று நினைத்து பூரித்துப் போனார் அவர்.

மகள் இப்படி சொன்னதுமே அவளை என்ன படிக்க வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்து விட்டார். அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் ஆசை பட்டார். ஆனால் அவர் குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லை. அதன் பின்னர் அவரின் கடின உழைப்பால் எப்படியோ அவர் முன்னுக்கு வந்து விட்டார். ஆனால் அந்த இன்ஜினியரிங் ஆசை மட்டும் அவரை விட்டு போக வில்லை.

எனவே மகள் உங்கள் விருப்பம் என்று சொல்லியதுமே , அவர் மனதில் முதலில் தோன்றியது இன்ஜினியரிங் தான்.

ஆனாலும் மகளுக்கு இது பிடிக்குமா என்கிற தயக்கத்துடன் தான் அவளிடம் இதை சொன்னார். ஆனால் அவள் மிக சந்தோஷமாகவே சரி என்று சம்மதம் கூறி விட்டாள். அவருக்கும் மகள் ‌சம்மதித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தான் படிக்காதை தன் மகள் படிக்க போகிறாள் என்ற ஆனந்தம் அவருக்கு.

அது முதல் தன் மகளுக்காக ஒரு சிறந்த பொறியியல் கல்லூரியை தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தேடினார்.தன் நீண்ட நாள் தேடலுக்கு பிறகு தன் மகளுக்காக ஒரு சிறந்த கல்லூரியைக் கண்டுப் பிடித்து இருந்தார் மார்த்தாண்டன். அவரின் தொழில் நண்பரான தேவராஜ் தான் இந்த கல்லூரியை அவருக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

அவரும் நேரில் சென்று கல்லூரியை சுற்றி பார்த்து , நன்கு விசாரித்து விட்டு வந்தார்.

அது முதல் அவள் கல்லூரிக்கு உடுத்தி கொண்டு போக வேண்டிய உடைகள் , பேக் , நகைகள், காஸ்மெட்டிக் என அனைத்தையும் அவரே பார்த்து பார்த்து வாங்கினார்.

அனைத்தையும் வாங்கி வைத்து விட்டு கல்லூரி திறக்கும் நாளிற்காக காத்திருந்தார்.

அவர் எதிர்பார்த்த அந்த நாளும் அழகாக விடிந்தது. நான்கு மணிக்கு எல்லாம் அலாரம் வைத்து எழுந்து, அனைவரையும் எழுப்பி வீட்டையே ஒரு வழி செய்து விட்டார்.

மகளை நச்சரித்து கிளம்பி வர சொல்லி விட்டு ஹாலில் அவளுக்காக காத்திருந்தார்.

அவள் கிளம்பி படி இறங்கி வரும் அழகை , இப்பொழுது தான் முதல் முறை அவளை பார்க்கிறது போல ரசித்து பார்த்தார். பின் அவர் கையாலேயே அவளுக்கு உணவு ஊட்டி விட்டார்.

கல்லூரியின் முதல் நாளான அன்று அவளுக்கு சிறப்பான சம்பவங்கள் பல காத்துக் கொண்டு இருந்தன.....